இஸ்ரேலை சேர்ந்த 20 பிணைக் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்


ஹமாஸ் தீவிரவாத படையினர் தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை இன்று (13) முதல் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை முன்னணி சர்வதேச செய்தி நிறுவனத்தின் வசம் ஹமாஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.

காசா பகுதியில் அமைதி நிலவ செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாளை எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. சுமார் 20 உலக நாடுகள் இதில் பங்கேற்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இதில் பங்கேற்கிறார். இந்நிலையில், இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாத படையினர் திட்டமிட்டுள்ளனர்.



இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான உடன்படிக்கையின் படி முதல் கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த சுமார் 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அதேநேரத்தில் சிறையில் உள்ள 2,000 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதை ஹமாஸ் தரப்பில் ஒசாமா ஹம்தன் உறுதி செய்துள்ளார்.


காசா பகுதியில் அமைதிக்கான ஆலோசனை கூட்டம்: காசா பகுதியில் அமைதிக்கான ஆலோசனை கூட்டம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் எகிப்து நாட்டில் நாளை நடைபெறுகிறது. காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவது, அமைதியை நிலவ செய்வது, மத்திய கிழக்கு பகுதியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது, பிராந்திய ரீதியிலான பாதுகாப்பு சார்ந்து புதிய முடிவுகளை எடுப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top