ஒலுவில் கைவிடப்பட்ட குழந்தை

ஒலுவில் – களியோடை ஆற்று பகுதியில் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது வேண்டுமென்று உருவாக்கப்பட்ட கட்டுக்கதை!

குழந்தையின் தாய் – தந்தை கைது,
விசாரணையில் பல விடயங்கள் அம்பலம்!

ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள்.

தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

குழந்தையின் தாயும் தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின் உறவினர்கள், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்து வந்ததாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) குறித்த பெண் தனது வீட்டில் சிசுவைப் பிரசவித்துள்ளார்.

இவ்விடயத்தை அறிந்து கொண்ட குழந்தையின் தந்தை, அவரின் காதலியின் வீடு சென்று; “எனது குழந்தையை நான் வளர்க்கிறேன் தாருங்கள்” என்று பெற்றுக்கொண்டு வந்துள்ளார் என, விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குழந்தையின் தந்தை -அவரின் சின்னம்மா (தாயின் சிறிய சகோதரி) ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, களியோடை ஆற்றுப் பகுதியில் கைவிடப்பட்டுள்ள பெண் குழந்தையொன்றைக் கண்டெடுத்துள்ளேன்; உங்களுக்கும் பெண் குழந்தை இல்லை. எனவே, இந்தக் குழந்தையை வளர்ப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரின் சின்னம்மாவும் சம்மதித்துள்ளார்.

இந்த நிலையில், குழந்தையின் தொப்புள்கொடி வெட்டப்பட்ட பகுதிக்கு, முறையாக சிகிச்சையளிக்கப்படாமையினாலும், அந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்ததாலும், ஒலுவில் வைத்தியசாலைக்கு அந்தக் குழந்தையை அவர்கள் கொண்டு சென்றனர்.

குறித்த அந்த தந்தை தனது சின்னம்மாவிடம் சொன்ன அந்தப் பொய்யின் காரணமாகவே, ‘குழந்தையொன்று ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், நபரொருவரால் கண்டெடுக்கப்பட்டதாக’ கதை பரவியது.

எனவே ஆற்றங்கரையில் குழந்தையோன்று அவ்வாறு கண்டெடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

இந்தப் பின்னணியில்தான், குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து, தற்போது -அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

முன்னராக, குறித்த குழந்தை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவருடையதாக இருக்கலாம் என – சமூக ஊடகங்களில் சிலர் அபாண்டமாக எழுதியிருந்தனர். அவ்வாறு எழுதப்பட்டமையைக் கண்டித்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அவ்வாறு எழுதியவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top