கொழும்பு:
“வேலை வாங்கி தருவோம்” என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் இன்னும் நிற்கவில்லை! இதேபோல், இலங்கை துறைமுக ஆணையத்தில் வேலை கிடைக்கச் செய்வதாக கூறி ரூ.2.45 இலட்சம் லஞ்சம் பெற்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மீன்பிடித்துறை முன்னாள் அதிகாரி ஒருவரும், முன்னாள் வீட்டு நிர்மாணத்துறை துணை அமைச்சரான இந்திகா பண்டாரநாயக்கவின் அலுவலக ஊழியருமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழுவின் தகவலின்படி, சந்தேகநபர்கள் ஒருவர் துறைமுக ஆணையத்தில் வேலை பெற உதவுவதாகக் கூறி, மொத்தம் ரூ.5 இலட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். அதில் முதல் தவணையாக ரூ.2.45 இலட்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள், வேலையை உறுதிசெய்த பின் மீதமுள்ள தொகையை பெற திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கைது செய்யப்பட்ட இருவரும் விரைவில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம், அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு பெயரில் நடைபெறும் லஞ்சம் மற்றும் மோசடி நடவடிக்கைகள் மீதான எச்சரிக்கை சின்னமாகும் என ஊழல் தடுப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



