யாழ்ப்பாணம் பழைய பூங்கா உள்ளக விளையாட்டரங்குப் பணிகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்டு வரும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு, யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், சுமார் 12 பரப்பளவு காணியைக் கையகப்படுத்தி, உள்ளக விளையாட்டரங்கு அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாணச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் காணப்படுவதால், அவற்றை அழித்து விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என்று பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன்படி, பழைய பூங்காவில் அமையவுள்ள விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கு இன்றைய தினம் (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மைதானம் அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துமாறு, 14 நாட்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

அதேபோல், எதிர்த்தரப்பினர் தமது ஆட்சேபணைகள் மற்றும் பதில்களை முன்வைப்பதற்காகவும் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top