– ரூ. 424 மில்லியன் செலவில் 10 மாதங்களுக்கு அபிவிருத்திப் பணிகள்

புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நாளை (15) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ளன. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தியை காணாமல் இருந்த இந்த பஸ் தரிப்பிடத்தில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நவீன பஸ் தரிப்பிடமாக இதனை மாற்றியமைக்கும் வகையில் புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிடம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென ரூ. 424 மில்லியன் செலவிடப்படவுள்ளது. 10 மாதங்களுக்கு அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ள நிலையில், புறக்கோட்டையில் தற்காலிக பஸ் நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு வருகை தருவோருக்கென புறக்கோட்டையில் 1964ஆம் ஆண்டு இந்த மத்திய பஸ் தரிப்பிடம் நிர்மாணிக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து சுமார் 1500 இற்கும் அதிகமான பஸ்கள் நாளாந்தம் பயணத்தை முன்னெடுக்கின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் பொது இடமாக இருந்த போதிலும் பல தசாப்தங்களாக இந்த இடம் உரிய பராமரிப்பு இன்றி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு வழங்கும் வகையில் 50 பஸ் தரிப்பிடங்களை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கமைய நாளைய தினம் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. திட்டத்திற்கு விமானப் படையின் தொழில்நுட்ப வளம் இதற்கு பயன்படுத்தப்பட்டவுள்ளது. புதிய தோற்றத்தில் உருவாகவுள்ள பஸ் தரிப்பிடத்தில் ஓய்வு நிலையம், தகவல் தொடர்பு நிலையம், பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்டவை நிர்மாணிக்கப்படவுள்ளன


