வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை!

பச்சிலைப்பள்ளி பளைப் பொதுச் சந்தையானது நேற்றும் இன்றும் பெய்த பலத்த மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி, சந்தை நிலப்பரப்பு முழுவதும் நீரில் மூழ்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும் பொதுச் சந்தையில் உள்ள மரக்கறிச் சந்தை மற்றும் மீன் சந்தை என்பவற்றுக்கு வருகை தருவது வழக்கம்.

எனினும், இன்றைய தினம் (16) மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மிகவும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

பொதுச் சந்தையின் சுற்றுச்சூழல் முழுவதும் வெள்ள நீர் வியாபித்துக் காணப்படுவதால், தமது பயண ஒழுங்குகளுக்கும் தமது வர்த்தகச் செயற்பாடுகளுக்கும் வெள்ளம் இடையூறாக இருப்பதாகவும், பல தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் பச்சிலைப்பள்ளி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பச்சிலைப்பள்ளிப் பொதுச் சந்தையில் தற்போது புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதோடு, ஆங்காங்கே கட்டிடப் பொருட்கள் குவிந்த வண்ணமும் இருப்பதாகவும், இவ்வேலைத் திட்டங்களை மிக விரைவில் பூர்த்தி செய்து தருமாறும் மக்கள் வேண்டி நிற்கின்றனர்.

பல காலமாகத் தாம் இப்பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாகவும், தமது பிரதேசத்தில் சிறிய அளவு மழை பெய்தாலும் பொதுச் சந்தை காணப்படும் பிரதேசத்தில் தாம் தமது அன்றாடச் செயல்பாடுகளைத் தொடர இடையூறாக இருப்பதாகவும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ஏதாவது உடனடி நடவடிக்கையைச் செய்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top