ஸ்னாப்சாட் பழைய பதிவுகளை சேமிப்பதற்காக கட்டணம் வசூலிக்க திட்டம்

ஸ்னாப்சாட், 2016 முதல் வழங்கப்பட்டு வந்த Memories அம்சத்தில் பயனர்கள் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு இனி கட்டணம் விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த அம்சம், குறுகிய காலத்திற்கு மட்டும் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்க அனுமதித்து வந்தது. ஆனால் இனி, 5GB-ஐ கடந்த அளவு Memories சேமிப்புகள் உள்ள பயனர்கள் அவற்றை தொடர்ச்சியாக அணுகிக் கொள்ள கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இங்கிலாந்து பயனர்களுக்கான சரியான கட்டண விவரங்களை ஸ்னாப்சாட் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், உலகளாவிய ரீதியில் படிப்படியாக இந்த மாற்றம் செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து பயனர்களுக்குமான Memories அம்சத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை அவசியம் எனவும் நிறுவனம் வலியுறுத்தியது.

ஆனால் சமூக ஊடகங்களில் பல பயனர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக பெருமளவு உள்ளடக்கங்களை சேமித்து வைத்திருந்தவர்கள், கட்டணம் செலுத்தாவிட்டால் தங்கள் பதிவுகளை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டி, ஸ்னாப்சாட் “அதிக ஆசைப்படுகிறது” என விமர்சித்துள்ளனர்.

5GB வரம்பை மீறும் பயனர்களுக்கு, தங்களின் உள்ளடக்கங்களை பதிவிறக்கம் செய்யவோ அல்லது 100GB சேமிப்பு திட்டத்திற்கு மேம்படுத்திக்கொள்ளவோ 12 மாத கால அவகாசம் வழங்கப்படும். 100GB சேமிப்பு திட்டத்தின் ஆரம்ப கட்டணம் மாதம் $1.99 ஆகும். மேலும், Snapchat+ அல்லது பிரீமியம் பயனர்களுக்கு 250GB சேமிப்பை மாதம் $3.99க்கு வழங்கும் திட்டமும் உண்டு.

பெரும்பாலான பயனர்களின் சேமிப்பு 5GB-க்கு குறைவாகவே உள்ளதால், அவர்களுக்கு இந்த மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தாது என ஸ்னாப்சாட் விளக்கியுள்ளது. எனினும், நீண்டகாலமாக இலவசமாக பயன்படுத்தி வந்த சேவைக்கு திடீரென கட்டணம் விதிப்பது அநியாயம் என பல பயனர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொழில் நுட்ப நிபுணர்கள், குறிப்பாக Battenhall நிறுவனர் ட்ரூ பென்வி, சமூக ஊடக தளங்களில் சேமிப்பு வசதிக்கு கட்டணம் விதிப்பது தவிர்க்க முடியாத ஒரு நிலையாகும் எனவும், மக்கள் அதிகமாக உள்ளடக்கங்களை சேமிப்பதிலும் குறைவாக பகிர்வதிலும் பழகி வருவதால் இது எதிர்காலப் போக்காக மாறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top