ஹொங்க்காங்: ஹொங்க்காங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய விபத்தில், ஒரு சரக்கு விமானம் ரன்வேயை விட்டு வழுக்கி கடலில் சரிந்தது. இதில் விமானம் மோதிய வாகனத்தில் இருந்த இரு விமான நிலைய பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
துபாயில் இருந்து வந்த ACT Airlines நிறுவனத்தின் போயிங் சரக்கு விமானம், காலை 3.50 மணியளவில் தரையிறங்கும் போது ரன்வேயை விட்டு விலகி கடலில் பாய்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹொங்க்காங் விமான நிலைய இயக்குநர் ஸ்டீவன் யூ கூறியதாவது:
“அந்த நேரத்தில் ஒரு பாதுகாப்பு ரோந்து வாகனம் ரன்வே அருகில் இருந்தது. விமானம் அந்த வாகனத்தை மோதியதில், அது கடலில் தள்ளப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அதில் இருந்த இரண்டு பணியாளர்கள் உயிரிழந்தனர்.”
விபத்தில் விமானத்தின் பின்னங்கால் பகுதி முற்றிலும் உடைந்து, கடலில் மூழ்கிய நிலையில் இருந்தது. முன்னிலை பகுதியும் கடுமையாக சேதமடைந்தது என வீடியோ காட்சிகள் காட்டின.
தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பவம் குறித்து ஹொங்க்காங் விமானப் பாதுகாப்பு ஆணையம் விசாரணை தொடங்கியுள்ளது.


