அரசு 1,500 மில். ரூபா ஒதுக்கியுள்ளதாக பாராளுமன்றில் அமைச்சர் சரோஜா சாவித்திரி நேற்று தெரிவிப்பு
நாட்டிலுள்ள ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து இருநூறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்காக அரசாங்கம் 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய கணக்காய்வு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
மேற்படி திட்டத்திற்காக நாம் 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கான முக்கிய காரணம் கடந்த ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும மூலம் நிவாரணம் பெறும் பயனாளிகளுக்கு போசாக்கான உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அப்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு இணங்க அந்த கொடுப்பனவு வழங்குவதை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.
அந்த நிதியை பயன்படுத்தியே மந்த போசனத்துடன் காணப்படும் தாய்மாருக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
கடந்த அரசாங்கத்தின் காலங்களில் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட நிதி அப்போதைய அமைச்சர்கள், ஜனாதிபதிக்கும் போய் சேர்ந்துள்ளது. அந்த வகையில் எமது அரசாங்கம் எப்போதும் மக்கள் நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படுகின்றது என்பதை குறிப்பிட வேண்டும்.



