மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் பதவியேற்றுள்ளார்


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ்.அருள்ராஜ்   அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று (26) திகதி உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி ஜே.ஜே.முரளிதரன் நேற்று (25) முதல் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான  ஜே.எஸ்.அருள்ராஜ்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை 15.09.2025 அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர், 2003 ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கிண்ணியா, சேருவில பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக இருந்ததுடன், வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு விசேட சேவையை ஆற்றியிருந்தார்.

நேற்று (25) வரை கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமைபுரிந்து வந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட  செயலாளராகவும், அரசாங்க அதிபராகவும் நியமிக்கப்பட்டு, இன்று முதல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரும் பணியாற்றவுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top