ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அதிகாரப்பூர்வ விஜயமாக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (30) காலை டோக்கியோவில் அமைந்துள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பான் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் திரு யோஹேய் சசகாவாவை சந்தித்தார்.
இந்த சந்திப்பில், ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இலங்கையின் அனைத்து சமூகங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பணிபுரிவதற்கான தனது உறுதிமொழியை திரு சசகாவா மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாடசாலைகள் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும் திட்டங்களை அவர் விளக்கினார்.
இலங்கை மக்களின் மேம்பாடு மற்றும் நலனுக்காக திரு சசகாவா எடுத்துக்கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் சமூக சேவைக்கான அவரது நீண்டகாலப் பங்களிப்புக்கு ஜனாதிபதி திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
வெளிநாட்டு அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை மற்றும் சுற்றுலாதுறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிற அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.



